டார்ஜீலிங் இமாலய பாரம்பரிய மலை ரயில் பயணம்

தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம்
(பயணக்கட்டுரை)

பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம்
பகுதி: 03 டார்ஜீலிங் பாரம்பரிய மலை ரயில் பயணம்

பரிந்துரை: இப்பதிவில் வாசகர்களின் அனுபவத்தை செறிவூட்ட பல்வேறு விழியங்களை (Videos) இணைத்துள்ளேன், செவிப்பொறிகள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது (Headphones Recommended).

டார்ஜிலிங் இமாலயன் இரயில்வே
நான்மாடக் கூடல் நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவ தொகுப்பின் இந்த மூன்றாம் பகுதியில் தேன் தமிழ் சொற்களை திரட்டி மேலும் பல்வேறு விழியங்களோடு வாசகர்களுக்கு சுவாரசியத்தை வழங்க காத்திருக்கிறது. இப்பதிவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

சியல்டா இரயில் நிலையத்தின் 9B நடைமேடையிலிருந்து உத்தர பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாரானது. எனது படுக்கையை அடைந்தேன், முழு இரவுப் பயணத்திற்கு தயாரானேன். சன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி பயணத்தை துவங்கினேன். பிறகு கையில்  ஆசிரியர் சு.வெங்கடேசனின் "வைகை நதி நாகரிகம்" என்ற வரலாற்று சான்றுகள் பற்றிய புத்தகத்தை படிக்கத் துவங்கினேன். நேரம் இரவு ஒன்பதை நெருங்கியது. பயணி ஒருவர் விளக்கை சட்டென அனைத்தார். புத்தகத்தை பையில் வைத்துவிட்டு நானும் உறங்கச் சென்றேன்.

நியூ ஜல்பைகுரி இரயில் நிலையம் (NJP)
காலை ஆறு மணியளவில் ரயில் நியூ ஜல்பைகுரி (NEW JALPAIGURI - NJP) ரயில்நிலையத்தை அடைந்தது. முதலாவது நடைமேடையில் உள்ள கட்டண‌ ஓய்வு அறைக்கு (PAID RETIRING HALL) சென்று புத்துணர்வு அடைந்தேன். பிறகு அங்கே இருந்த இரயில்வே உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு தொலைபேசி மற்றும் வேறே சில மின்சார உபகரணங்களை மின்னேற்றம் செய்துகொண்டேன்.

நியூ ஜல்பைகுரி இரயில் நிலையம்
டார்ஜீலிங் இமாலயன் இரயில்வேயின் (Darjeeling Himalayan Railway) யூனஸ்கோ நினைவுச்சின்னமான (UNESCO MONUMENT) மலையில் பயணம் செய்ய முதல் வகுப்பில் முன்பதிவு செய்திருந்தேன்.

நியூ ஜல்பைகுரி


டார்ஜிலிங் இமாலய இரயில்வே (DHR)
இந்த குறுகிய அகல இரயில் பாதைக்கு என தனியே நடைமேடையை அந்த இ‌ரயில் நிலையத்தில் அமைத்திருந்தனர்.

டார்ஜீலிங் இமாலயன் மலை ரயில் நடைமேடை

டார்ஜீலிங் இமாலயன் மலை ரயில் இருப்புப்பாதை
டார்ஜிலிங் இமாலயன் இரயில்வே என்பது மேற்கு வங்க மாநிலத்தில் நியூ ஜல்பைகுரிக்கும் டார்ஜீலிங் மலை நகருக்கும் இடையே 88 கிலோமீட்டர்  தொலைவிற்கு மொத்தம் 14 இரயில் நிலையங்கள் கொண்டு 1881 ஆண்டு முதல் 2 அடி அகல குறுகிய இரயில் பாதையில் இரயில் இயக்கப்பட்டு வருகிறது.‌
இரண்டடி அகல இருப்புப்பாதை


இருப்புப்பாதை
கடல்மட்டத்திலிருந்து ‌7218 அடி (2200 மீட்டர்) உயரத்தில் உள்ள டார்ஜிலிங் நகருக்கு இந்த இரயில் பயணிக்கிறது. இந்த இரயில் பாதையை 1999 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யூனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது.

மலை இரயிலுடன் நான்


காலை சரியாக 10 மணிக்கு இரயில் நடைமேடையை வந்தடைந்தது. என்னுடன் மேலும் சிலர் இந்த இரயிலில் பயணிக்க வந்திருந்தார்கள். இரயிலை கண்டதும் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. ஆர்வத்தில் ரயிலை சுற்றி சுற்றி புகைப்படங்கள் எடுத்தேன். மேலும் இந்த இரயிலில் எஞ்சின் திருப்பப்பட்டு பெட்டிகளுடன் மறு முனையில் இணைப்பதை ஆர்வத்துடன் பார்த்தேன்.

மலை ரயில் பாதை வழித்தட வரைபடம்
  
டார்ஜிலிங் மலை ரயில்

இந்த இரயிலை பொம்மை இரயில் (TOY TRAIN) என செல்லமாக அழைக்கின்றனர். இரயில் இப்போது புறப்பட தயாரானது, நடைமேடையை விட்டு மெல்ல நகர்ந்தது.

இரயில் பெட்டிகள்
தனது முதல் கட்ட பயணமாக (0/88 கிமீ) சிலிகுரி நகரத்தை நோக்கி வடக்கே சென்றது அந்த இரயில். 

முதல் வகுப்பு இரயில் பெட்டி உட்புறம்

குளிர்சாதனப் பெட்டி
இரயில் அதிகபட்சமாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் பயணித்தது. சிலிகுரி நகருக்குள் நுழைவதற்கு முன்னர் மலை ரயிலுக்கு வழிவிட்டது அகல ரயில்பாதை பயணிகள் ரயில், இது எனக்கு மிகவும் புதிய அனுபவத்தை வழங்கியது. தெற்கு சிலிகுரி டவுன் - மகாநந்தா நதியை கடந்து மெல்ல சிலிகுரி சந்திப்பு (SILIGURI JUNCTION) இரயில் நிலையத்திற்குள் நுழைந்தது.

சிலிகுரி சந்திப்பு இரயில் நிலையம்


இதுவே மலை ரயிலின் முதல் அதிகாரப்பூர்வ நிறுத்தம் (8/88 கிமீ);, மதிய உணவுக்கு இந்திய இரயில்வே உணவு கழகம் (IRCTC) எங்களிடம் தகவல் பெற்றார்கள்.
இப்போது இரயில் மீண்டும் புறப்பட்டது, இந்திய மலை இரயில்களில் வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக இந்த இரயில் சாலைகளை அங்கும் இங்கும் கடந்து சென்றது.


மலை ரயில் பயணிக்க வழிவிட்டு சாலையில் வாகனங்கள் காத்து நின்றது பார்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சிலிகுரியில் நிலவும் தட்பவெப்பநிலையால் இங்கு சமதளத்தில் கூட தேயிலை பயிரிடப்படுகிறது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.



இரயில் சுமார் 10 கிலோமீட்டர் பயணித்த நிலையில் (18/88 கிமீ) "சுக்னா" (SUKNA) ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த இரயில் நிலையமே ரயில் மலை பாதையில் பயணிக்கும் முன் உள்ள கடைசி தொழில்நுட்ப நிறுத்தம்.

சுக்னா இரயில் நிலையம்



தற்போது இரயில் மீண்டும் புறப்பட்டு மலை பகுதியில் சாலையில் ஓரமாகவே பயணப்பட்டது. மெல்ல மலையில் ஏறத் துவங்கியது, மனதிற்குள் ஏதோ இன்றியமையாத இன்பம் தோன்றியது.

மலைப்பாதை 


அழகிய மலை சரிவுகளில் காடுகளுக்கு உள்ளே ரயில் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்லத் தொடங்கியது. வழியெங்கும் ஆச்சரியங்கள் கொட்டிக்கிடந்தன, கண்ணில் காண அடங்காத அளவில் இயற்கையின் அழகு என சொக்கி போய் பயணித்துக் கொண்டிருந்தேன்‌.

வனப்பகுதியில் இரயில்


சுமார் ஒரு மணி நேர பயணத்தில் ரயில் 26 கிலோ மீட்டர் பயணித்து (26/88 கிமீ)  "ராக்டோங்" (RANGTONG) ரயில் நிலையத்தை வந்தடைந்தது. தற்போது மணி நண்பகல் 12:30, வயறு இப்போது சற்று பசிக்கத் துவங்கியது. எல்லோரும் கீழே இறக்கி சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். தற்போது மீண்டும் இரயில் தன் பயணத்தை தொடங்கியது.


இரயில் சாலையில் ஒரு ஓரமாக பயணித்தபடி இருக்கையில், ஒருபுறம் பச்சை போர்வை போர்த்திய அழகிய மலைகள் மறுபுறம் சாலையில் எங்கள் இரயிலை கடந்து செல்லும் வாகனங்கள் என மாறி மாறி பார்த்துக்கொண்டு வந்தேன்.


இருச்சக்கர வாகனத்தில் பயணித்த பலர் எங்களை பார்த்து கையசைத்தும், புகைப்படங்கள் அல்லது ஒளிப்பதிவு செய்தபடி இருந்தனர். அனைத்தையும் தாண்டி இரயில் மெல்ல மலைப்பாதையில் முன்னேறி சென்றது.

வாகன ஓட்டிகள் புகைப்படத்திற்கு சைகை காட்டினர்
  
சிலிகுரி - டார்ஜிலிங் ஷேர் கேப் (Shared Cab)
சுமார் 45 நிமிடங்கள் கழித்த பிறகு, இரயில் தற்போது 38 கிமீ தொடந்து பயணித்து (38/88 கிமீ) "திந்தாரியா" (TINDARIA) இரயில் நிலையத்தில் நுழைந்தது. திந்தாரியா இரயில் நிலையத்தில் எங்களுக்கு மதிய உணவு பறிமாறப்பட்டது. மதிய உணவில் சோறு, பருப்பு குழம்பு, இரண்டு முட்டைகளை கொண்ட முட்டை குழம்பு, பொரியல் மற்றும் ஊறுகாய் இருந்தது.

இந்திய இரயில்வே உணவு கழகம் (IRCTC) பறிமாறிய மதிய உணவு
சுமார் 30 நிமிடங்கள் இரயில் அங்கே உணவு இடைவேளைக்கு நின்றிருந்தது. பின்னர் இரயில் நிலைய அதிகாரியின் அறிவுரைப்படி இரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

உணவுக்கு பின் அதுவம் மதிய உணவிற்கு பின் மலை ரயில்  பயணம் என்பதால் சற்று சொகுசாக இருந்தது. பறவைகளின் ஓசை காதுகளில் இதமாக இருந்தது, குளிர்ந்த காற்று என் முகத்தை வருடிச்சென்றது.

மலை இரயில் கடக்க வழிவிட்டு நிற்கும் வாகனம் 
ந்திய இரயில்வேயில் வேறெங்கும் இல்லாத சிறப்பாக இந்த 88 கிமீ இரயில் பாதையில் உயரங்களை எளிதில் இரயில் அடைய ஆறு ஜிக் ஜேக் (ZIG-ZAG) ரயில் பாதை அமைப்புக்கள் மற்றும் ஐந்து சுற்றுப்பாதைகள் (LOOPS) கட்டமைத்துள்ளனர், இவற்றில் சில இப்போது பயன்பாட்டில் இல்லை.

மலைச்சரிவில் கட்டுமான பணிகள்

அழகிய மலை வனப்பு
இந்த ஜிக் ஜேக் பாதைகளில் முன்னும் பின்னும் பயணிப்பதால் இரயில் எளிதாக உயரங்களை அடைகிறது. இத்தகைய அமைப்பால் தொழில்நுட்பம் மற்றும் பாலம், குகை போன்ற அமைப்புகளுக்கான செலவுகள்  குறைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 44 கீமீ பயணித்து (44/88 கிமீ) அதாவது சரியாக பாதி தொலைவை கடந்து இரயில் இப்போது "கயபாரி" (GAYABARI) என்ற இடத்தை கடந்தது. ஒருவழி பாதை என்பதால் மலையிலிருந்து கீழிறங்கும் ஒரு இரயிலுக்கு வழிவிட்டு நின்றது, பின்னர் மீண்டும் இரயில் முன்னேறியது.

கீழிறங்கும் ஒரு இரயிலுக்கு வழிவிட்ட இரயில் 


டீசல் எண்ணெய் கொண்டு இயங்கும் இரயில் என்பதால் அடிக்கடி தண்ணீர் பிடிப்பதற்காக அவசியம் இல்லாமல் போனது, எனினும் ஆங்காங்கே இரயில் எஞ்சின்களுக்கு தண்ணீர் பிடிக்கும் அமைப்புக்கள் இருந்ததைக் காண முடிந்தது.‌

மகாநதி

டார்ஜிலிங் மலைச்சரி 
மாலை மூன்று மணியளவில் இரயில் 50 கிமீ தொலைவை கடந்து (50/88 கிமீ) "மகாநதி" (MAHANADI) இரயில் நிலையத்தை வந்தடைந்தது. "சுன்பத்தி" (CHUNBATTI)  மற்றும் அகோனி பாயிண்ட் (AGONY POINT) எனப்படும் இரண்டு அழகான வட்ட பாதையில் இரயில் பணித்த அந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருந்தது.


மகாநதி எனப்படும் பகுதியில் உள்ள ஜிக் ஜாக் பாதையில் இரயில் ஏறிய அந்த நிமிடம் கண்களில் நான் கண்ட காட்சி இப்போதும் கூட அப்படியே உள்ளது. ஆம், பாதையில் எங்கும் விழுந்து கிடந்த பணித்துகள் தான் அது.




வாழ்வில் முதல் முதலாக நேரில் வெண் பணியை கண்ட என் மனம் சிறு குழந்தை போல துள்ளிக் குதித்தது. என்னை அறியாமலே ஆர்ப்பரித்து கத்த துவங்கினேன், இரயிலும் என்னுடன் இணைந்து கூவியது. 

சாலையோர அழகிய வீடு
குர்சியோங் நகருக்கு சற்று முன்னர், சாலையோர சந்தை (Road Side Market) ஒன்று இருந்தது. இரயில் அந்த சந்தையின் ஊடே மெதுவாக நுழைத்து சென்றபோது கிராம மக்கள் எங்களை பார்த்து கைகளை அசைத்தனர். எனக்கு இது ஆச்சரியத்தை அளித்தாலும் அப்பகுதி மக்களுக்கு இது தினசரி நிகழ்வுதான் போலும். சந்தையில் பல்வேறு வகையான காய்கறிகள், இறைச்சி போன்றவற்றை விற்றுக் கொண்டிருந்தனர்.


மேலும் இரயில் தொடர்ந்து முன்னேற டார்ஜிலிங் மலை ரயிலின் தலைமையகமான "குர்சியோங்" (Kurseong) என்ற இடத்திற்கு இரயில் மாலை நான்கு மணிக்கு 57 கிலோமீட்டர் (57/88 கிமீ) பயணித்து வந்தடைந்தது. 

டார்ஜிலிங் மலை இரயில் தலைமையகம், குர்சியோங்
அனைவரும் இறங்கி சற்று காலாற நடந்து காற்று வாங்கினோம். கதிரவன் மறையத் துவங்கிய நேரமது, எங்கும் மஞ்சள் வண்ணம் பரவியது அந்த அழகை பார்பதற்கு இரு கண்கள் போதவில்லை.

குர்சியோங் இரயில் நிலையம்

இரயில் மின்சார விளக்குகளுக்கு மின் இணைப்பு
இரயில் நிலையத்தில் இருந்து சிறிய கடையில் தேனீர் பருகிய பின்னர் மீண்டும் இருக்கைக்கு வந்தேன். இரயில் மீண்டும் தன் பயணத்தை துவக்கியது. இரயில் பயணித்துக்கொண்டிருந்த போதே, ஆதவன் விடைபெற்றான். அப்போது வரை இல்லாத ஏதோ இனம்புரியாத ஒரு சூழல் என்னை மெய்மறக்கச் செய்தது. அப்படியே தூங்கிவிட்டேன், திடிரென என்னை யாரோ எழுப்பினார் தடாலென்று விழித்துக் கொண்டு நிலைமையை அறிந்தேன். 

என் கைபேசியில் மூன்று தவறிய அழைப்புகள் (Missed Calls) யாரென்று பார்த்தபோது "கூம்" என்ற டார்ஜீலிங் நகரில் வசிக்கும் என் நண்பர் ரவி. அவருக்கு மீண்டும் அழைத்து இரயில் சற்று தாமதமாக வருவதை அறிவித்தேன். அவர் சரி பத்திரமாக வாருங்கள் என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

சொனாடா நகர்
மாலை ஐந்தரை மணி இருக்கும் இரயில் "சொனாடா" (SONADA) வை கடந்த சென்றுகொண்டிருந்தது, இருள் சூழ்ந்த நிலையில் இரயில் உள்ளே விளக்குகள் எரியத் துவங்கியிருந்தது. மீண்டும் என் நண்பர் ரவி அழைத்திருந்தார் இப்போதே நேரம் அதிகப்படியாக ஆகிவிட்டது இனி டார்ஜிலிங் வரை இரயிலில் சென்று, பின்னர் கூம் வருவதற்கு நேரமாகிவிடும் எனவே இரயில் கூம் நகர் வழியாக தான் டார்ஜீலிங் செல்லும் ஆகவே கூம் இரயில் நிலையத்திலேயே இறங்கும்படி கூறினார். 

மாலை ஆறு மணிக்கு  இரயில் 81 கிமீ (81/88 கிமீ) பயணித்து இந்தியாவின் மிக உயரமான இரயில் நிலையமான 7407 அடி உயரத்தில் (2258‌ மீட்டர்) உள்ள "கூம்" (GHOOM - GHUM) ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

கூம் இரயில் நிலைய நடைமேடை (மறுநாள்)


"கூம்" இந்தியாவின் மிக உயரமான இரயில் நிலையம்
என் கௌச் சர்பிங் வலைதள (Couch Surfing) நண்பர் திரு. ரவி காந்த் சிங் (Ravi Kant Singh) தனது நண்பருடன் என்னை வரவேற்க அந்த இரயில் நிலையத்திற்கு ஏற்கனவே வந்திருந்தார், என்னை கண்டதும் ஓடி வந்து பயணத்தை விசாரித்து ஆரத் தழுவினார். அவர் உடன் வந்த நண்பர் என் பைகளை வாங்கிக்கொண்டார்.

மூவரும் இப்போது கூம் இரயில் நிலையத்திலிருந்து அவர்கள் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினோம்.

- தொடரும்..

Comments

  1. இதை படிக்கும் போது நானும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல உணர்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, தொடர்ந்து ஆதவரளியுங்கள் நண்பரே

      Delete
  2. Felt my self a part of your travel journey

    ReplyDelete
  3. Amazing write-up! Just loved the way you narrated!!!

    ReplyDelete
  4. Its really awesome...Will join with on the next Trip🤩😍Awaiting for the awesome experience😇😎

    ReplyDelete
    Replies
    1. Sure buddy we will go together, please make your name visible on your comments 🙄🥰

      Delete
  5. நண்பரே முந்தைய கட்டுரைகளை போல இன்னும் அதனினும் விட மிக நேர்த்தியாக தீட்டப்பட்ட ஓவியமாகவே எனக்கு அமைந்திருந்தது. தாங்கள் நியூ ஜல்பைகுரி இரயில் நிலையத்திலிருந்து டார்ஜிலிங் செல்லக்கூடிய 14 இரயில் நிலையங்களையும் நான் கண்டதாகவே உணர்கிறேன். அவ்வகையில் தாங்கள் இணைத்துள்ளவை என் அனுபவத்தை மெய்யாக்குகிறது. இரயில் பயணிக்கும் பாதையினூடாக காட்சிகளை விவரிக்கும் உங்கள் அணுகுமுறை படிப்பவர் விழிகளில் காட்சிகளை உயிர்ப்புடன் விரிப்பதன் வாயிலாக உணரமுடிகிறது. முன்தைய கட்டுரைகளைப் போலவே வரலாற்று தகவல்கள் (1881 Construction of Darjeeling Railway, 1999 Announcement of UNESCO) செய்தித் துணுக்குகள் (Toy train,) சுவாரசிய தகவல்கள் (Tea plantation in surface) போன்றவை கண்களுக்கு மட்டுமல்லாது அறிவுக்கும் சற்று ஈந்துள்ளீர்கள்.
    இயற்கையை தாங்கள் இரசிக்கும் அதே உணர்வினை எங்களுக்கும் வழங்க தங்கள் எழுத்து ஓட்டம் பெரிதும் உறுதுணையாக அமைந்துள்ளது. பனிப்படர்ந்த பயணம், மங்கும் மாலைப் பொழுது, குதூகல உணர்ச்சியை தாங்கள் பருகியதோடல்லாமல் படிப்பவருக்கும்‌ சற்றும் குறையாமல் வழங்கிய விதம் பாராட்டுக்குரியது. மேன்மேலும் எங்களை இட்டுச் செல்ல காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்காகவே காத்திருந்தேன், என் எழுத்தை முதலில் இரசித்தவர் நீங்கள் தான் ஆகவே உங்கள் மேலான கருத்துக்கள் என்னை மேன்மேலும் எழுதத் தூண்டுகிறது.

      மிக்க நன்றி!!

      Delete
  6. Amazing write-up! Just loved the way you narrated !!! Ur narration made me to feel that I was traveling with u..

    ReplyDelete
  7. Very nice.. You beat wikipedia.. So much informations..😊😍

    ReplyDelete
  8. My mind visited those refreshing pages of my memories about travelling in this rail from darjeeling.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

டார்ஜிலிங் நகர வீதிகளில்...

தனியே கொல்கத்தாவில் இரண்டாம் நாள்...