டார்ஜிலிங் நகர வீதிகளில்...

தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம்
(பயணக்கட்டுரை)

பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம்
பகுதி: 05 டார்ஜிலிங் வீதிகளில்...

நான்மாடக் கூடல் (மதுரை) நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவத்தொகுப்பின் ஐந்தாம் பகுதிக்கு தமிழன்னையை வணங்கி உங்கள் அனைவரையும் பேரன்புடன் வரவேற்கிறேன்.

டார்ஜிலிங் வீதிகளில்...
கூம் நகரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது டார்ஜிலிங். பகிர் மகிழுந்தில் இருபது நிமிட பயணத்தில் டார்ஜிலிங் ரயில் நிலையத்தை அடந்தேன். ரயில் நிலையத்தை கடந்தது செல்கையில் நேற்று நான் இரயிலில் பயணித்து இங்கு தான் வந்திருக்க வேண்டும் என நினைத்தேன்.


டார்ஜிலிங் ரயில் நிலையத்தை கடந்து டார்ஜிலிங் நகர பிரதான சந்தை (Market) அருகே என்னை இறங்கிவிட்டனர். அங்கிருந்து சாலை சந்திப்பில் இருந்து வடகிழக்கு நோக்கி நடக்க துவங்கினேன்.

நகரின் வடக்கு எல்லையை நார்த் பாயிண்ட் (North Point) என்று அழைக்கின்றனர். சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த பகுதிக்கு நடந்தே சென்றேன். அந்த நடைபாதையில் நடக்கும் போது "புதிய வானம் - புதிய பூமி" என்ற பழைய புரட்சித்தலைவர் பாடல் நினைவுக்கு வந்தது.

சாலையோர (நடைபாதை) கடைகள்
நம்மூர் நடைபாதைகள் போன்றே அங்கும் பல்வேறு வகையான தின்பண்டங்கள், துரித உணவுகள் விற்கப்பட்டது. அவற்றுள் சிலவற்றை வாங்கி கொறித்துக்கொண்டு நடத்தேன்.

கஞ்சன்ஜுங்கா சிகரங்கள்

Kanchenjunga Peaks
அவ்வாறு நடக்கையில் கண்முன்னே ஒரு காட்சி. நகரின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் கஞ்சன்ஜுங்கா (Kanchenjunga) மலைத்தொடர் கண்களில் தென்படும். இந்த மலைத்தொடரை உள்ளூர்வாசிகள் உறங்கும் புத்தர் (Sleeping Buddha) என அழைக்கின்றனர். காரணம் அந்த மலையின் தோற்றம், ஒரு மனிதர் படுத்திருப்பது போல தோன்றும்.

அரைமணி நேரத்திற்குள்ளாகவே கால்கள் சோர்வடைந்தது, பிறகு மகிழுந்து ஒன்றில் ஏறி நகரின் வடக்கு எல்லையான நார்த் பாயிண்டை அடைந்தேன். வடக்கு எல்லையில் உள்ள டார்ஜிலிங் ரோப்வே பயணத்தை முதலில் முடிக்க திட்டமிட்டேன்.

டார்ஜீலிங் ரோப்வே

ரோப்கார் பயணச்சீட்டு


டார்ஜிலிங் ரோப்வே 1968 இல் தொடங்கப்பட்டது இது இந்தியாவின் முதல் கேபிள் கார் அமைப்பாகும். இது ஆரம்பத்தில் கீழே உள்ள பள்ளத்தாக்குகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களை இணைக்க அமைக்கப்பட்டது, ஏனெனில் சாலை வழியாக எளிதாக செல்லமுடியாது. ஒரு கேபிள் கார் அல்லது ஒரு கோண்டோலாவில் தொடங்கி, தற்போது 16 கேபிள் கார்களில் ஒவ்வொரு கோண்டோலாவில் ஆறு நபர்கள் பயணிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது. 2003ல் நிகழ்ந்த விபத்தில் 4 நபர்கள் உயிரிழந்தனர்.
கோண்டோலா (GONDOLA)

ரோப்கார் - பயணிகள்

ரோப்கார் இயக்கம்
கேபிள் காரில் பயணிக்க பலரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர், இருப்பினும் தனியாக பயணிப்பவர்களை வரிசையில் நிற்கவைக்காமல் நேரடியாக அனுப்பினார் அந்த நபர். ஆகவே சிறிது நேரம் கூட நிற்காமல் என் ரோப்கார் பயணம் துவங்கியது.


‌கேபிள் காரில் பயணிக்கையில் கீழே உள்ள பள்ளத்தாக்கின் பிரமிக்க வைக்கக்கூடிய காட்சியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மலை சரிவுகளில் பசுமையான தேயிலைத் தோட்டங்கள், பாயும் ஆறுகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கிழக்கு இமயமலை எல்லையின் அற்புதமான காட்சியைக் காண கண்கள் போதவில்லை. மேலும் கஞ்சன்ஜுங்காவின் சிகரங்கள் என இயற்கையின் இத்தகைய அருட்கொடை அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டேன்.


சுமார் 45 நிமிட சவாரியில் சுமார் 7,000 அடி (அல்லது 2134 மீ) உயரத்தில் இருந்து 800 அடி (அல்லது 244 மீ) வரை கீழ்நோக்கி பயணித்தேன் அங்கு கடைசி நிலையமான சிங்லா பஜார் அமைந்துள்ளது. இருப்பினும் தற்போது சவாரி துக்வார் என்ற நிலையம் வரைதான் இயக்கப்படுகிறது, அங்கு இருந்து கோண்டோலாஸ் மீண்டும் ‌சிங்கமாரி (Singamari) திரும்பியது.


"ஹேப்பி வேல்லி" (HAPPY VALLEY) டீ-எஸ்டேட்

எதிர்வரும் ரோப் கார்

கஞ்சன்ஜுங்கா சிகரங்கள்

ரோப்வே வழித்தடம்
மீண்டும் கேபிள் கார்கள் மேலே ஏற துவங்கியது ஆனால், அதற்கு முன்னர் துக்வார் ரோப்வே நிலையத்தில்  பயணிகளை புகைப்படங்கள் எடுக்கவும் சற்று காலாற நடக்கவும் கட்டாயமாக இறங்கிவிட்டனர்.

துக்வார் ரோப்வே நிலையம்

கஞ்சன்ஜுங்கா மலைச் சிகரம்

Kanchenjunga Peaks
இங்கிருந்து கஞ்சன்ஜுங்கா மலைத்தொடர் இன்னும் சற்று அருகில் தெரிந்தது. என்னுடன் ரோப்காரில் பயணித்த தெலுங்கானாவில் இருந்து வந்த குடும்பத்தினர் என்னிடம் நன்றாக பழகவே சில புகைப்படங்களை அவர்கள் என்னை எடுத்து வழங்கினர். பின்னர், மீண்டும் பயணித்து மேலே வந்தோம், ரோப்கார் பயணம் இனிதே நிறைவுற்றது.

நார்த் பாயிண்ட்
அங்கிருந்து மேற்கே 500மீட்டர் தொலைவில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்றேன். இந்த உயிரியல் பூங்கா "பத்மஜ நாயடு இமாலய உயிரியல் பூங்கா" (Padmaja Naidu Himalayan Zoological Park) இந்த பூங்காவை டார்ஜிலிங் மிருகக்காட்சி சாலை என்றும் அழைக்கிறார்கள். 

பத்மஜ நாயடு இமாலய உயிரியல் பூங்கா மற்றும் இமாலய மலையேற்ற நிறுவனம், டார்ஜிலிங்


டார்ஜிலிங் உயிரியல் பூங்கா

உயிரியல் பூங்கா நுழைவுச்சீட்டு

தனிமையில் நான்

இந்த பூங்கா 67.56 ஏக்கர் (27.3 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ளது. 1958 இல் திறக்கப்பட்டது இந்த உயிரியல் பூங்கா  சராசரியாக 7,000 அடி (2,134 மீ) உயரத்தில் அமைந்துள்ளது, இதுவே இந்தியாவின் மிகப்பெரிய உயரமான இடத்தில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவாகும். இந்த பூங்கா ஆல்பைன் நிலைமைகளுக்கு ஏற்ற விலங்குகளை இனப்பெருக்கம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றது, மேலும் பனிச்சிறுத்தை,  ஆபத்தான நிலையில் உள்ள இமயமலை ஓநாய் மற்றும் சிவப்பு பாண்டா ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளனர்.

அழகிய கனிகளுடன் சிறு தாவரம்

டார்ஜிலிங் உயிரியல் பூங்கா
உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான பறவைகள், விலங்குகள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

வித்தியாசமான பறவை

பஞ்சவர்ணக்கிளி

தென் அமெரிக்க நீல-மஞ்சள் நிற கிளி (BLUE - YELLOW MACAW) 

கண்களை கவரும் வகையில் பல்வேறு வகையான பறவைகளை கண்டுகளித்தேன்.

பனிச்சிறுத்தை (கண்டுபிடியுங்கள் பார்போம்) - SNOW LEOPARD 
இமாலய பனிச்சிறுத்தையை முதன்முதலில் கண்டேன், அந்த அனுபவத்தை வார்த்தைகளில் எழுதிய இயலவில்லை காரணம் அந்த சிறுத்தை ஒரு மரக்கட்டை போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது.


இமாலய ஓநாய் - HIMALAYAN FOX

ஓய்வெடுக்கும் ஓநாய்
இமயமலை ஓநாய் குடும்பம் ஒன்று சிறிய சிறிய அழகிய சேட்டைகளை செய்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த பகுதியில் கூட்டம் அலைமோதியது.


வங்காள புலி - BENGAL TIGER
வங்காள புலி, கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை போன்றவற்றை மற்ற இடங்களில் காண்பதை விட இங்கே புதிய அனுபவமாக இருந்தது. காரணம் மற்ற உயிரியல் பூங்காக்களில் விலங்குகள் சமதளத்தில் அமைந்திருக்கும் ஆனால் இமாலய உயிரியல் பூங்கா மலைச்சரிவில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். மேலும் அந்த புலி சரியாக நான் சென்ற நேரத்தில் வெளியில் நடமாடியது.

கரடி - BEAR
அங்கிருந்த ஒரு கூண்டில் கரடிக்குட்டி ஒன்று காண்போரை சிரிப்பில் ஆழ்த்தியது ஏனெனில் அந்த கரடி புகைப்படங்களுக்கு ஏற்றவாறு (Pose) படுத்திருந்தது.

இமாலய மலையேற்ற நிறுவனம் - HIMALAYAN MOUNTAINEERING INSTITUTE (HMI)
பத்மஜ நாயடு உயிரியல் பூங்காவில் மேலும் இரண்டு வளாகங்கள் இருந்தது. அதில் ஒன்று "இமாலய மலையேற்ற நிறுவனம்" (Himalayan Mountaineering Institute - HMI). இந்த மலையேறும் நிறுவனம் உயிரியல் பூங்கா வளாகத்திலேயே  அமைந்துள்ளது.



இந்தியாவில் மலையேறுதலை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டாக ஊக்குவிப்பதற்காக இமயமலை மலையேறுதல் நிறுவனம் (எச்.எம்.ஐ டார்ஜிலிங்) இந்தியாவின் டார்ஜிலிங் நகரில் 1954 இல் நிறுவப்பட்டது. "டென்சிங் நோர்கே" (Tenzing Norgay) மற்றும் "எட்மண்ட் ஹிலாரி" (Edmond Hillary) ஆகியோரால் 1953 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் முதல் மலையேற்றம் நிகழ்ந்தது. இந்த நிறுவனத்தில் மலையேற்றம் பற்றிய பல்வேறு பொருட்கள், உடைகளை இங்கு காட்சிப்படுத்தியிருந்தனர்.

வங்காள இயற்கை அருங்காட்சியகம்

தனிமையில் இனிமை
பின் அதனருகில் உள்ள வங்காள இயற்கை அருங்காட்சியகத்திற்கு சென்றேன்.  அங்கு வங்காளத்தின் வளங்கள், காடுகள், தாவரங்கள், பயிர்கள், விலங்குகளின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தது. இவற்றை கண்டுவிட்டு நான் வெளியே வந்தபோது மணி மூன்று. அப்போது தான் எனக்கு பசிக்கவே செய்தது.

நார்த் பாயிண்ட் - செயிண்ட் ஜோசப் கல்லூரி (ST.JOSEPH COLLEGE, DARJEELING)
‌உயிரியல் பூங்காவில் இருந்து வெளியே வந்தபோது ஒரு மேற்கத்திய கட்டிடம் கண்ணில் பட்டது, இந்த கல்லூரியில் தான் என் நண்பர் ரவி கல்வி பயின்றாராம். சாலையை கடந்து ஒரு நேபாள உணவு விடுதியில் சூப் மற்றும் மோமோஸ் (Momos) சாப்பிட்டேன் பிறகு அங்கே சாப்பிட்டட பிறகு நகரின் முக்கிய கடைவீதிக்கு சென்றேன் (டார்ஜிலிங் மார்க்கெட்) அங்கு பல்வேறு வீதிகளில் வலம் வந்தபடி இருந்தேன். ஸடார்ஜிலிங்கில் நிலவும் குளிருக்கு கையுறைகள் வாங்கினேன் சற்று கதகதப்பாக இருந்தது.

டார்ஜிலிங் மார்கெட் (பிரதான கடைத்தெரு) - DARJEELING MARKET


குளிர்கால உடைகள் விற்கும் கடைகள்
டார்ஜிலிங் தேயிலை உலகப்புகழ் பெற்ற ஒன்று, ஆகவே வீடு மற்றும் நண்பர்களுக்கு தேவையான அளவு தேயிலைகளை வாங்கினேன். இங்குள்ள அரசு தேயிலை அங்காடியில் தேயிலை வாங்குவது சிறந்தது.

பிறகு மீண்டும் கூம் நோக்கி மகிழுந்தில் பயணிக்க காத்திருந்தேன். மாலை வேளை என்பதால் அனைத்து வாகனங்களும் சிலிகுரி நகருக்கு இயக்கப்பட்டது. இப்போது சட்டென ஒரு சிந்தனை தோன்றியது, நண்பர்களுக்கு இரவு உணவை நான் சமைக்க திட்டமிட்டேன். அருகாமையில் இருந்த கோழி இறைச்சி கடையில் இறைச்சியை வாங்கிக்கொண்டு நண்பர் ரவியிடம் இதுபற்றி கூறினேன்.


சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு மகிழுந்தில் ஏறி கூம் நகரை அடைந்தேன். மணி 6:15 ஆகியிருந்தது, இருள் சூழத் துவங்கியது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வேகமாக நடக்க துவங்கினேன், காலையில் நிஸ்சல் என்னை கூட்டிவந்த அதே காட்டுப் பாதையில் நடந்தேன். ஜசிறிது நேரம் நடந்தபோது எனக்கு முன்பும் பின்பும் யாருமில்லை, இருள் மேலும் சூழ்ந்தது.  தற்போது கூம் நகர மயானத்தை கடந்தேன், முன்பு எப்போதோ கேட்ட பழைய அமானுஷ்ய கதைகள் பயத்தை வரவழைத்தது. வேகமாக நடந்தேன், இருப்பினும் என் நிழலும் காட்டில் வந்த சத்தங்களும் என்னை மேலும் படபடக்க வைத்தது.‌‌

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகள், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சாலை மற்றும் எல்லையில்லா அமைதி என வியர்கத்துவங்கியது. கையில் பல்வேறு பண்டங்கள், பச்சை இறைச்சி என இன்னும் பயத்தை உருவாக்கியது, இதற்கு பேய் பயம் மட்டுமே காரணம் அல்ல ரவி முன்தினம் கூறிய கருஞ்சிறுத்தை பற்றிய தகவல்கள் தாக காரணம்.

கருஞ்சிறுத்தை போன்ற காட்டு பெரும் பூனைகளுக்கு மோப்ப சக்தி அதிகம் என எப்போதோ படித்திருக்கிறேன், சாலையோர புதரில் வந்த சத்தம் என்னை நிலைகுலைய வைத்தது. பயந்து கூச்சலிட்டேன், அருகில் இருந்த சரிவில் ஒருவர் இருவர் வெளியே வர கத்தி விட்டேன் பிறகு அவர்கள் அப்பகுதியில் வாழ்பவர்கள் என அறிந்தேன். அவர்கள் என்னை அமைதிப்படுத்தினர். என்னுடன் ரவியின் வீடுவரை வந்து விட்டுச் சென்றார்கள்.

அவர்களுக்கு நன்றி கூறி வீட்டிற்குள் நுழைந்தேன். ரவி மற்றும் யுகல் இரவு விருந்துக்காக மது மற்றும் கேம்ப் பயர்களை தயார் செய்து கொண்டிருந்தார்கள். நான் உடைகளை மாற்றி பின் நடந்ததை கூறினேன், அவர்கள் என் பயத்தை கண்டு சிரித்தார்கள்.

நான் வாங்கிய கோழி இறைச்சியை கொண்டு ‌நம் கொங்கு நாட்டு "பள்ளிப்பாளையம் கோழி வறுவல்" (Pallipalayam Chicken Fry) செய்ய ஆயுத்தமானேன். நாற்பத்தி ஐந்து நிமிடங்களில் சமையல் முடிந்தது (மலை பிரதேசங்களில் பொதுவாக சமைக்க நேரம் அதிகரிக்கும்). அனைவரும் சாப்பிட தயாரானோம்.

இரவு உணவு தயாரிப்பு

பள்ளிப்பாளையம் கோழி வறுவல் - PALLIPALAYAM CHICKEN
நிஸ்சல் செய்திருந்த கலைவை வறுத்த சோறு (Fried Rice) , உருளை சீஸ் சூப் (Potato Cheese Soup) மற்றும் பள்ளிப்பாளையம் கோழி வறுவல் என உணவு முடிந்தது. எங்களுடன் வின்னியும் தனக்கான இரவு உணவை சாப்பிட்டது.

கலவை வறுத்த சோறு மற்றும் உருளை சீஸ் சூப்

பள்ளிப்பாளையம் கோழி வறுவல்
பிறகு கேம்ப் ஃபையருடன் மது கொண்டாட்டம் துவங்கியது. ரவி ஏதோ ஒரு வெளிநாட்டு மதுபானத்தை பரிமாறினார். இரவு வேளையில் மலைச்சரிவில் மது, தீயின் கதகதப்பு என மெதுவாக இன்பத்தில் திளைத்திருந்தேன். அவ்வப்போது சிறிது புகையும் கூட, டார்ஜிலிங் பகுதிகளில் உயர்இரக புகை கிடைக்கும் என்பதை காலை அறிந்துகொண்டேன்.

கேம்ப் ஃபயர் (Camp Fire Party)

மதுக்கோப்பையுடன்..‌.
மறுநாள் டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் மாநில தலைநகர் கேங்டாக் செல்வதாக திட்டமிட்டிருந்தேன்‌. நான் எனது அறைக்கு வந்து படுக்கையை தயார் செய்தேன். பல்வேறு கதைகளை ரவியும் என்னுடன் பகிர்ந்துகொண்டார், இரவு மணி பத்தை கடந்திருந்தது. 

புகையிலை - WEED
உறங்கச் செல்ல முடிவு செய்தோம். அறையில் மின் சூடேற்றி ஏற்கனவே போடப்பட்டிருந்தது, இதன் காரணமாக அறை கதகதப்பாக இருந்தது.

மின்சார அறை சூடேற்றி
இப்போது நிஸ்சல் புகைக்க வேண்டுமா என கேட்க மேலும் ஒரு முறை புதைத்துவிட்டு படுக்கச் சென்றேன்.

- தொடரும்...


Comments

  1. Ur narration made me to roam in the zoo!! Great narration dude..

    ReplyDelete
  2. Super macha
    I like to join with u��

    ReplyDelete
  3. ஒரு நாவலை படித்த ருசிகரம். உண்மையில் படிக்க படிக்க நீண்டுகொண்டே போகாதா என எண்ணத் தோன்றுகிறது. புத்தகமாக பதிப்பிட்டால் நிச்சயம் ஓரளவேனும் மேற்கூறிய எண்ணம் தணிய வாய்ப்புள்ளதாக உணர்கிறேன். அனுபவங்களை இத்துணை அழகாகவும், நேர்த்தியாகவும், உணர்ச்சிகளை உள்ளடக்கிய உயிர்ப்புடனும் அளித்த பாங்கு பாராட்டுதலுக்குரியது. மேன்மேலும் படிக்க அவாவுடன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, உங்கள் கருத்துக்கள் என்னை எப்போதும் மேலும் உயிர்ப்புடன் எழுதிட வைக்கிறது.

      Delete
  4. நல்ல தகவல் அருமையான விளக்கம் நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

தனியே கொல்கத்தாவில் இரண்டாம் நாள்...