சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம்
(பயணக்கட்டுரை)

பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம்
பகுதி: 06 சிக்கிம் - டீஸ்டா நதிக்கரையில்...


நான்மாடக் கூடல் (மதுரை) நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த அனுபவத்தொகுப்பின் இறுதிப்பகுதிக்கு தேனினும் இனிய தமிழை வணங்கி உங்கள் அனைவரையும் அகமகிழ்ந்து வரவேற்கிறேன்.

இரவு இதமான மதுவின் மயக்கத்துடன் கதகதப்பான சூழலில் நன்றாகவே உறங்கியிருந்தேன். மறுநாள் காலை எழுந்தவுடன் நிஸ்சல் டார்ஜிலிங் தேநீர் வழங்க அவற்றை அருந்திவிட்டு, உடமைகளை பைகளில் திணித்து புறப்பட தயாரானேன். குறிப்பு மூன்றாவது நாளாக இன்றும் குளிக்கவில்லை காரணமாக அங்கு நிலவிய குளிர்.
தி வில்லேஜ், கூம் - The Village, Ghoom
காலை உணவாக சம்பா மற்றும் பால் அருந்திய பின்னர் புறப்படுவதற்கு முன்பாக "தி வில்லேஜ் - ஹோம்ஸ்டே" இடத்தை சற்றே காலாற சுற்றி நடந்துவிட்டு வந்தேன். அப்போது ரவி ஏதோ ஒரு வகையான பழங்களை பறித்து வைத்திருந்தார்.


ஃபக் ஃபகே பழம்

Fuc Fuckay Exotic Fruit
Hangover Fruit
அந்த பழத்தின் பெயர் "ஃபக் ஃபகே" (Fuc - Fucay), இதற்கு Hangover Fruit என்ற பெயரும் உண்டாம், காரணம் மது போதை அளவுக்கு மிஞ்சி தலைக்கு ஏறி காலையில் ஏற்படும் தலைவலிக்கு இந்த பழம் உடனடி தீர்வாக பயன்படுகிறது.

சரி, இப்போது என் உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானேன்.
எனது பயண நண்பன்
டார்ஜிலிங் தேயிலை தோட்டங்களும், அங்கிருந்த அழகிய இயற்கை வனப்புகளில் அங்குள்ள மக்கள் வாழும் எளிய இனிய வாழ்வை, நண்பர் ரவி, நிஸ்சல், யுகல் மற்றும் குட்டி நாய் வின்னியை விட்டு பிரிய மனமே இல்லை.



"நிஸ்சல், ரவி, யுகல் மற்றும் வின்னி"
எனினும் வழக்கமான பிரியாவிடைகளுக்கு பின்னர், நேபாள பாரம்பரியத்தின் படி ரவி மற்றும் நண்பர்கள் எனக்கு பிரியாவிடை மரியாதை செலுத்தினர்.


கதா - Kadha (நேபாள பாரம்பரியம்)
"கதா" (Kadha) எனப்படும் ஒரு வெள்ளை பட்டு போன்ற சால்வை அணிவித்து வணக்கம் செலுத்தி வழியனுப்பினர். இவ்வாறு செய்தால் என் பயணத்திற்கு அவர்கள் முன்னோர்கள் பாதுகாப்பு அளிப்பார்களாம். அவர்களின் அளப்பரிய அன்பு ஆச்சரியம் அளித்தது. அனைவருக்கும் நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டேன்.

The Boys Crew!!


நிஸ்சல் என்னை தனது இருசக்கர வாகனத்தில் கூம் நகருக்கு அழைத்து வந்தார். அவர் அங்கிருந்த கடைவீதியில் சென்று எதோ சிலவற்றை வாங்கி வந்தார்.

என் பயணத்தில் நான் கொறிப்பதற்கு சில தின்பண்டங்கள் தான் அவை, அதிலும் குறிப்பாக காட்டு மாட்டு பால் கொண்டு செய்யப்பட்ட கடிக்க இயலாத ஒரு மிட்டாய், வாயில் போட்டால் கரைய இரண்டு மணி நேரமாவது ஆகும்.

கூம் ரயில் நிலையத்திலிருந்து மகிழுந்து ஒன்றில் டார்ஜீலிங் மார்கெட் பகுதியை அடைந்தேன். டார்ஜிலிங் மார்கெட் அருகே இருந்த டாக்சி நிலையத்தில் சிக்கிம் மாநிலம் கேங்டாக் (Gangtok) பயணிக்க பயணச்சீட்டு பெற்றேன்.

டார்ஜிலிங் மார்கெட் 
டார்ஜிலிங்கில் இருந்து கலிம்பொங் (Kalimpong), ராங்போ (Rangpo), ராணிபூல் (Ranipool) வரையிவான 100 கிமீ மலைப் பாதையில் பயணம் துவங்கியது. தேயிலை தோட்டங்கள் வழியாக வளைந்து நெலிந்த சாலையில் பயணித்தேன். 


இரண்டு மணிநேர பயணத்திற்கு பிறகு மதிய உணவிற்காக ஒரு இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது. உணவு உண்ட பிறகு மீண்டும் பயணத்தை துவங்கினோம், வழியெங்கும் அடர்ந்த காடுகள், தேக்கு தோப்புகள் என கண்களுக்கு விருந்து படைத்தது.

கேங்டாக் பயணத்தின் போது சாலையோர உணவகம்

வண்டியில் பல வங்காள மற்றும் நேபாள பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது, மொழி புரியவில்லை என்றபோதிலும் கேட்க நன்றாக இருந்தது. சற்று நேரத்தில் எனக்கு ஒரு நதி கண்ணில் பட்டது, ஆம் அந்த நதி நீல நிறத்தில் வான்வெளி உருகி ஓடுவது போல மிகவும் ரம்மியமாக இருந்தது.


அந்த நதியின் பெயர் "டீஸ்டா" (Teesta) டீஸ்டா நதி 315 கிமீ (196 மைல்) நீளமுள்ள ஒரு நதியாகும், இது கிழக்கு இமயமலையில் துவங்கி இந்தியாவில் சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளம் வழியாக பாய்ந்து வங்கதேசத்தில் பாய்ந்து இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது சிக்கிமிற்கும் மேற்கு வங்கத்திற்கும் இடையிலான எல்லையை உருவாக்குகிறது. 

கலிம்போங் - டீஸ்டா நதி

வளைந்தோடும் டீஸ்டா 

நீல வானம் உருகியோடுவது போன்ற டீஸ்டா
‌இந்தியாவில் இது ரங்போ, கலிம்பொங், டார்ஜிலிங், ஜல்பைகுரி மற்றும் மேக்லிகஞ்ச் நகரங்கள் வழியாக பாய்கிறது. இது பங்களாதேஷின் புல்ச்சாரியில் (Fulchari) உள்ள ஜமுனா நதியில் இணைகிறது. அந்த நதியின் அழகு, வருணிக்க வார்தைகள் போதாது.

நதியை கலிம்பொங் (Kalimpong) என்ற ஊரில் கடந்து, மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து சிக்கிம் மாநிலத்திற்குள் நுழைந்தது வாகனம்.


நதியின் இரு கரைகளிலும் ராப்டிக் (Rafting) எனப்படும் காற்று படகு சவாரிகள் செய்தபடி இருந்தனர். இரண்டு புறமும் அடர்ந்த காடுகளால் அரண் அமைத்தது போல அந்த பள்ளத்தாக்கில் பயணித்திருந்தேன்.‌ நான்கு மணிநேர மலைப்பாதை பயணத்தில் இறுதியாக சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் (Gangtok) வந்தடைந்தேன்.

கேங்டாக் (Gangtok) சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம்
என் நண்பர் தயாராக அங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் காத்திருந்தார், அவரை சந்தித்து விட்டு இருவரும் டீஸ்டா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை காண சென்றோம். அவருடன் இருசக்கர வாகனத்தில் 30 நிமிடங்களில் அழகிய காடுகள் வழியான பயணத்தில் அந்த அணையை அடைந்தோம்.

டீஸ்டா நதியின் குறுக்கே உள்ள அணை
அணையின் கீழ் பகுதியில் சில இடங்களுக்கு சென்று அங்கு இருந்த பகுதிகளை கண்டேன், சமீபத்தில் பொழிந்து பணி ஆங்காங்கே இருந்தது.

பனி படர்ந்த மலைகள்


இந்த காட்சியை பார்த்து கொண்டே இருக்கு வேண்டும் என தோன்றுகிறயது, இருப்பினும் மறுநாள் நான் சென்னை திரும்ப திட்மிட்டிருந்தேன் ஆகவே அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கேங்டாக் நகரை அடைந்தேன்.

கண்ணில்கொள்ளா இயற்கையின் அழகு

நீலம் நீலம் எங்கும் நீலம் - டீஸ்டா இமாலய நதி
மாலை சிற்றுண்டிக்கு பின்னர் என் நண்பருக்கு நன்றி தெரிவித்து சுமார் 5 மணிக்கு சிலிகுரி நகருக்கு செல்லும் மகிழுந்தில் என் பயணத்தை துவங்கினேன். மீண்டும் அழகிய அந்த அடர் வனங்களின் இடையே 115 கிமீ கலிம்பாங், செவோக் வழியாக பயணித்து சிலிகுரி நகருக்கு பயணித்தேன்.

அந்தியில் டீஸ்டா
சிலிகுரி (Siliguri) மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தின் தலைநகர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில் இதுவே. 27கிமீ மட்டுமே அகலமுள்ள குறுகிய இந்திய நிலப்பரப்பு இங்கு உள்ளது.

"கௌச் சர்பிங்" (Couch Surfing) மூலமாக அன்று நண்பகல் அறிமுகமாகி அன்றே என்னை தன் இல்லத்தில் தங்க வைக்க அனுமதித்தார் என் நண்பர் திரு.முதித் அகர்வால் (Mudit Agarwal) அவர் சிலிகுரி மாநகரில் தனியாக தங்கியிருந்தார். முதித் ஒரு இளம் தொழிலதிபர், 
அன்று புத்தாண்டு வரவேற்பு நாள் அதாவது டிசம்பர் 31, ஆகவே அனைத்து பெரு நகரங்களை போன்றே எங்கும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாலை ஏழு மணியளவில் அவர் அனுப்பியிருந்த முகவரியை தேடிச் சென்றேன்.

இரயில் நிலையம் அருகில் தான் என்பதால் எளிதாக அவர் இல்லத்தை அடைந்தேன், அவர் அதிகம் தொலைபேசியில் என்னிடம் பேசவில்லை. அவர் கூறிய வீடு பெரும் மாளிகை போன்று இருந்தது. வாயில் கதவை சற்று தயக்கத்துடன் தட்டினேன் பதில் இல்லை, உடனே நண்பர் முதித்தை தொடர்பு கொண்டேன், 
அவர் உள்ளே செல்லுங்கள் என கூறினார் மேலும் தான் வருவதற்கு சிறிது நேரம் ஆகும் எனவும் என்னை ஓய்வெடுக்க கூறினார். தன் வீட்டில் பணிபுரியும் நபருக்கு விபரங்களை கூறினார் போல, நான் உள்ளே சென்றதும் அந்த முதியவர் என்னை வரவேற்றார்.‌

முதித் இல்லத்தில் எனக்கான அறை



எனக்காக முதல் தளத்தில் ஒரு பெரிய அறையை ஏற்பாடு செய்திருந்தார் முதித்.
மூன்று நாட்களாக குளிக்காமல் இருந்த காரணத்தால் நன்றாக குளித்துவிட்டு அப்படியே ஓய்வெடுத்தேன்.

இரவு உணவும் அறையை தேடி வந்தது. சாப்பிட்டு கொண்டிருந்த போது முதித் என்னை சந்திக்க வந்தார். அவரிடம் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். தனது தொழில் மற்றும் சில சொந்த விபரங்களையும் அவர் என்னிடம் பகிர்ந்தார். 12 மணி நேர அறிமுகத்தில் அவர் காட்டிய அன்பு என்னை ஆச்சரியப்படுத்தியது.‌

இரவு உணவிற்கு ஜபின்னர் அவர் புத்தாண்டு கொண்டாத்திற்கு தன் நண்பர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் அங்கு மது மற்றும் அசைவ உணவுகள் பரிமாறிப்பட்டது. இரவு மணி பன்னிரண்டு ஆனது 2020ஆம் புத்தாண்டு பிறந்தது இருவரும் அன்பை பரிமாறிக் கொண்டோம், பின் இருவரும் வீட்டிற்கு திரும்பினோம்.
முதித் அகர்வாலும் நானும்!
காலையில் சுமார் 7 மணிக்கு "பக்தோகரா" (Bagdogra) பன்னாட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டேன்.நண்பர் முதித் அகர்வாலிடம் விடைபெற்று அவர் ஏற்பாடு செய்திருந்த மகிழுந்தில் முப்பது நிமிடம் பயணித்து விமான நிலையத்தை அடைந்தேன்.



நண்பர் முதித் அகர்வாலிடம் விடைபெற்று அவர் ஏற்பாடு செய்திருந்த மகிழுந்தில் முப்பது நிமிடம் பயணித்து விமான நிலையத்தை அடைந்தேன். பக்தோகரா விமான நிலையம் மற்ற பயணிகள் விமான நிலையம் போல இல்லாமல், இது இராணுவத்திற்கு சொந்தமான விமான நிலையம்.

‌‌பாதுகாப்பு சோதனைகளை கடந்து, காத்திருக்கும் இடத்தை அடைந்தேன். நான் பயணிக்க இருந்து விமானம் வந்தடைந்தது, இந்த விமானம் இடைநில்லாமல் சென்னை விமான நிலையத்தை இரண்டரை மணிநேத்தில் அடையும் என கூறியிருந்தனர்.‌

பக்தோகரா (Bagdogra) பன்னாட்டு விமான நிலையம்

விமான நிலைய பேருந்து
விமானத்தில் ஏறி என் இருக்கையில் அமர்ந்தேன், விமானம் இப்போது புறப்பட்ட தயாரானது.
இறுதிகட்ட பயணம் - சென்னை நோக்கி



விமானம் ஓடுதளத்தில் இருந்து மேல் எழும்பிய அந்த தருணத்தில் இந்த பயணத்தின் மொத்த நினைவுகளும் ஒரு நொடியில் கண்முன் வந்து போனது.



விமான பயணம் சற்றே சலிப்பாக இருந்தாலும் அந்த அதீத தனிமை பல்வேறு நினைவுகளை மனதுக்குள் தீண்டிச் சென்றது.


உயரத்தில் எங்கோ!

புத்தாண்டு காலை விமான உணவு!


வங்காள விரிகுடா மீது விமானம் பறந்து செல்கையில் கப்பல்கள் கூட சிறு எறும்புகள் போல  தோன்றியது.


வங்கக்கடல் மேலே...
மதியம் பன்னிரண்டு மணியளவில் சென்னை மாநகரை நெருங்கியது, இதோ கண்முன்னே சென்னை மாநகர். எனக்காக என் நண்பன் வீர சோழன் சென்னை விமான நிலையத்தில் என்னை அழைத்து செல்ல காத்திருப்பான்.


மதுரை துவங்கி மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா, டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் வரை மொத்தம் 5000 கி.மீ தனியே பயணித்த அனுபவத்தின் தொகுப்பு, இந்த பயணக் கட்டுரை பற்றிய கருத்துக்களை தளவாய் பதிவு செய்யுங்கள்.

🚂 மதுரை - சென்னை இரயில் பயணம் : 468 கி.மீ
✈️ சென்னை - ஐதராபாத் - கொல்கத்தா விமான பயணம் : 1807 கி.மீ
🚋 கொல்கத்தா டிராம் பயணம் -15 கி.மீ
🚂 கொல்கத்தா - நியூ ஜல்பைகுரி இரயில் பயணம் : 574 கி.மீ
🚂 நியூ ஜல்பைகுரி - டார்ஜிலிங் இரயில் பயணம் : 88 கி.மீ
🚕 டார்ஜிலிங் - கேங்டாக் சாலை பயணம் : 100 கி.மீ
🚕 கேங்டாக் - சிலிகுரி சாலைப் பயணம் : 110 கி.மீ
🚌 இதர சாலைப் பயணங்கள் : 100 கி.மீ
✈️ பக்தோகரா - சென்னை விமான பயணம் : 1738 கி.மீ

இந்த பயணத்தில் எனக்கு அறிமுகமாகிய அனைவருக்கும், எனக்கு உதவிய மருத்துவர் மகத்தோ, ரவி மற்றும் நண்பர்கள், முதலில் அகர்வால் மேலும் பெயர் தெரியாத பலருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
இந்த பயணம் எனக்களித்த அனைத்து அனுபவங்களும் என்னை மேலும் முன்னே இட்டுச்செல்லும் என உளமார நம்புகிறேன்!

என்னுடன் இந்த வலைப்பதிவின் வாயிலாக மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை நான் தனியே சென்ற பயணத்தில் உடன் வந்த அனைவருக்கும் நன்றி!

மீண்டும் எழுத்தின் வடிவில் மற்றொரு பயணத்தில் சந்திப்போம்‌.
வாழ்க தமிழ்!

- சாந்தப்பிரியன் காமராஜ்

Comments

  1. Thank you for taking us to Bengal an sikkim with you dear.i started to feel like, i am travelling with you. Good narration and happy memories .

    Write more ! . 👍

    ReplyDelete
    Replies
    1. Thank you so much dear! I feel like writing more! Thanks again for supporting me!

      Delete
  2. உண்மையில் உங்களுக்கு அதீத துணிச்சல் நண்பா.. தனிமை ஒன்றை மட்டும் துணையாக கொண்டு பயணத்தில் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்து உள்ளீர்கள்.. தங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! தங்கள் ஆதரவை என்றும் வேண்டி.

      Delete
  3. உங்கள் எழுத்துக்கள் மூலம் என்னையும் வடகிழக்கு இந்தியாவிற்கு அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி நண்பா...
    மீண்டும் இதேபோல் ஒரு பயணத்தில் தங்களை சந்திக்க விரும்புகிறேன்..
    நன்றி 😀🙏

    ReplyDelete
  4. The beauty of Teesta river and Darjeeling can be felt by your narration..loved Ur narration 🥰🥰🥰 tnq for taking me to Darjeeling

    ReplyDelete
  5. தனிமையில் இனிமை...awesome I also planning my trip...

    ReplyDelete
  6. அருமை... அருமை... அருமை... எழுத்தின் மணத்தில் எங்கள் மனங்களை கட்டி உங்கள் பயணத்தின் முதுகில் சவாரி செய்த உணர்வு.. இந்த பயணக்கட்டுரையின் அனைத்து தொகுதிகளையும் ஒன்றிணைத்து படிக்க ஆவலாக உள்ளேன். முடிந்தால் அதை பகிரவும். எழுத்தால் காட்சி படுத்துவதில் தேர்ச்சி பெற்ற தாங்கள் இறுதியில் பயணக்கட்டுரை மை முடித்த பாங்கு ஆகா..நெஞ்சம் தொட்டது. தாங்கள் தேர்ந்த முதிர்ந்த எழுத்தாளராக பரிணமித்துவருவது புலப்படுகிறது. தனிமையிலே இனிமை காண முடியுமா? என்ற கேள்விக்கு நிச்சயம் முடியும் என்பதாக தங்கள் பயணம் இருந்ததோடு புத்தாண்டையும் பயணத்தில் பிறந்தது இனி வாழ்நாளெல்லாம் உங்கள் நினைவுகளாக நெஞ்சில் நிலைப்பெற்று வாழும் நண்பரே. வர்ணணையுடன் கூடிய காட்சிகளோடு எழுத்தால் உணர்வுகளையும் அறிவுக்கு ஊட்ட தகவல்களையும் வழங்கிய உங்கள் எழுத்து என்றென்றும் தொடர் என் வாழ்த்துகள். அத்துடன் தங்கள் பயணம் முழுவதும் தங்களுக்கு உதவிய நண்பர்களை எண்ணும்போதும் குறிப்பாக 12 மணிநேர பழக்கத்தில் அத்தனை சவுகரியங்களை ஏற்படுத்தி தந்த நண்பரையும் அறியும் போது சிலிர்த்தேபோனேன். தங்கள் இனிய வாழ்வு இனியும் இனிதே அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா அருமை, உங்களின் கருத்திற்கு காத்துக் கொண்டிருந்தேன்!!
      மக்க நன்றி!

      இந்த பாராட்டுகளை என் பிறந்தநாள் பரிசாக கொள்கிறேன்!

      Delete
  7. நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டும். சுவையாக இருக்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டார்ஜிலிங் நகர வீதிகளில்...

தனியே கொல்கத்தாவில் இரண்டாம் நாள்...