முதல் தேடல்...(இறுதிப்பகுதி)
முதல் தேடல் .... ( பயணக்கட்டுரை இறுதிப்பகுதி ) பயணம் : 01 வால்பாறை-ஆலப்புழா பகுதி : 02 பயண தூரம் : 1100 கிமீ (சாலைப்பயணம் / நீர்வழிப்பயணம்) உடலை வருடும் குளிர்த்தென்றல் வீசும் அதிகாலைப் பொழுதில் வென்னீராடிய பின்னர் கையில் ஒரு கோப்பை தேநீருடன் விடுதியின் முற்றத்தில் ஊஞ்சலில் மெல்ல ஆடியவாறு, பசும்புல்வெளியில் உறங்கும் வெண்பனி துளிகளை ஆதவன் மெல்ல தீண்டியதை ரசித்திருந்தேன். வால்பாறை - சாலக்குடி பயணம் கடிகாரம் ஆறு மணியை காட்ட, சிற்றுண்டிக்கு பின் விடுதியில் இருந்து புறப்பட தயாரானேன். மகிழுந்தில் வால்பாறை பேருந்து நிலையம் வரை நண்பர் வந்து வழியனுப்பி விட்டு செல்ல, பேருந்துக்காக காத்திருந்தேன், சற்று நேரத்தில் வால்பாறையில் துவங்கி மலுக்கப்பாறை, அதிரப்பள்ளி வழியாக திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடிக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறினேன், சாலை மார்கமாக அந்த அழகிய ஐந்தரை மணிநேர பயணம் சாரல் மழையுடன் துவங்கியது. அடர்ந்த வனத்தின் பசுமையான பள்ளத்தாக்குகள் ஊடே நீண்ட நெடும் பாம்பை ஒத்த சாரல் மழையில் தோய்ந்த சாலையில் பேருந்து ஊர்ந்து செல்ல, சாளரங்களில