முதல் தேடல்...

முதல் தேடல்....
(
பயணக்கட்டுரை)

பயணம்: 01 வால்பாறை-ஆலப்புழா
பகுதி: 01 



நாகர்கோவில் துவங்கி வால்பாறை, ஆலப்புழை வரை சென்று திருவனந்தபுரம் வழியே நாகர்கோவிலை மீண்டும் அடைந்த 

"என் முதல் தேடல் பயணம்"

தேயிலை தோட்டத்தில் நான்

வாரயிறுதியில் நாகர்கோயிலிருந்து பேருந்து ஊடே இரவுப்பயணம் மேற்கொண்டேன். மழைச்சாரலோடு என்னை வரவேற்றது பொள்ளாச்சி. பயணம் முழுவதும் முன்னேற்பாடின்றி (தங்குமிடம் தவிர) மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன்.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஒன்றரை மணிநேர காத்திருப்புக்கு பிறகு வால்பாறை மார்க்க பேருந்து வந்தது. சில நிமிடங்களில் சாளர ஓர இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து புறப்படையில் மழை தீவிரமாக கொட்டியது, பேருந்து மெல்ல மலைப்பாதையில் ஏறத்துவங்கியதும் மழையும் சற்றே ஓய்வெடுத்தது.

பசுமை பேசும் பள்ளத்தாக்கில் ஆழியாறு அணை நீர்பிடிப்பு பகுதி, பலவண்ண மலர்கள், பூச்சிகளின் ரீங்காரம், சிற்றோடைகள், சாலையோர அருவிகள் என எங்கும் எங்கெங்கும் இயற்கை அன்னை வழங்கிய வளங்களை கண்டு மன களைப்பு களிப்பாய் மாறியது.

கூழாங்கல் ஆறு

நெடுந்தூர மலைமுகடுகளும், பசுமை போர்வை போன்ற தேயிலை தோட்டம், அதன் ஊடே செல்லும் சாலை, உடலை வருடும் மேகங்கள், அங்கம் சிலிர்க்கும் குளிர்த்தென்றலும் பள்ளி செல்லும் குழந்தைகள், எங்கோ கொட்டும் அருவியின் ஒசை எங்கும் இசையென மனதை கரைத்தது.

இவைகளை கண்டவாரே வால்பாறை நகரை அடைந்தேன். குளிருக்கு இதமாய் சாலையோர கடையில் தேநீர் பருக மெல்ல உயிர்பெற்றது போல உணர்ந்தேன்.

என்னை அழைத்து செல்ல வந்திருந்தார் என் நண்பர்(வலைதள பயணியர் குழு மூலமாக நட்புறவு பெற்ற நபர்), அவர் வால்பாறையில் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தார். 

கார்மேகங்களுக்கு இடையே மறைந்தும் தெரிந்தும் கதிரவன் நான் செல்லும் இடமெல்லாம் மெல்ல மெல்ல நகர்ந்தான். காலை உணவருந்தி வயற்றை அமைதிபடுத்தி வால்பாறையை சுற்றித்திரிய ஆயுத்தமானேன்.


அவ்வப்போது ஆதவன் வந்தாலும், மழலையென சிணுங்கியபடியே இருந்தது மலையின் மடியில் பூத்த மழைத்துளி. தேயிலை தோட்டங்களின் ஊடே செல்கையில் மகிழ்ந்து வளர்ந்த மரங்கள் மலைவளங்களை அழகிற்கு அழகாக்க, தாழ்பரப்பில் தவழ்ந்து படந்த நீர்த்திரள்கள் என ரம்மியம் சேர்த்தன.

வெள்ளிமலை நீர்ச்சுரங்கம் செல்லும் வழியில் என்னை வியக்கவைத்த கூழாங்கல் ஆற்றில் குளிர்நீரில் களித்திருந்தேன். ஆங்காங்கே ஆட்டு மந்தைகள் மேய்ந்திருக்க, அங்கே உயர் மரங்கள் காற்றுடன் கரம்கோர்த்தாட, மலர்களை தூவியது என்னை வாழ்த்தியதுபோல தோன்றலானது.



சுரங்கப்பாதை நெருங்கியபோது வியப்பு தொற்றுக்கொண்டது. நீரோடையருகே, இயற்கையான சிற்றருவியில் நீராடிய பிறகு அங்கே சூழ்ந்த அசாதாரண நிலையறிந்து அங்கிருந்து வால்பாறை தேயிலை தோட்டங்கள், இன்னபிற காட்சிமுனைகளை காண புறப்பட்டேன்.

சாலைகளில் ஆரவாரமின்றி, வளைந்த நெளிந்து சென்றது வாகனம். எண்ணிலடங்கா நீர்த்திரள்கள் அமைதியான கண்களை கவர்ந்தன.
மேகங்கள் அவ்வப்போது குடைபிடித்து மதிய பொழுதை இரம்மியமாக்கியது.


பிற்பகலில் மீண்டும் விடுதிநோக்கி பயணிக்க துவங்கினேன். மண்ணை முத்தமிட்ட மழைத்துளிகள், வாழ்வில் மேன்மை பெற்றமையால் துள்ளிக்குதித்தன. தப்பிய சிலத்துளிகள் இலைகளில் தஞ்சமடைந்தன, சுமைதாளாமல் பாதியை பூமிக்கும் மிச்சம் வானிற்கும் வழங்கின.

இளையராஜாவின் இசையோடு, வண்ண மலர்கள் நறுமணத்தால் மயங்கியபடியே விடுதியை வந்தடைந்தேன். அறுசுவை விருந்தோடு வயறும், மனதும் நிறைந்து ஓய்வெடுக்கையில் கதிரவன் மெல்ல விடைப்பெற துவங்கினான்.

இருளும் குளிரும் அனைத்தையும் தன் கட்டுக்குள்கொள்ள துவங்கின. அபூர்வமான மிருகங்கள், பறவைகள், பூச்சிகளின் ஒலியோடு விடுதியருகே இருந்த சிற்றருவியின் ஒலி நான் தனிமையில் இல்லை என்பதை மீண்டும் உணர்த்தியது.


தேயிலை தோட்டம் ஒருபுறம், அழகிய மலை வனப்பில் பாறை மீது வழிந்தோடும் நீர், பனிச்சாரல், எங்கும் நிறைந்த இருள், வென்னொளி உமிழும் திங்கள் என கானகம் சொர்க்கம் போல மாறியது.

காலாற சில தொலைவு நடக்க விரும்பினேன், வழியில் எதார்தமான பலரை சந்தித்தேன். நான் பேசும் விதம் பிடித்திருக்கவே பலர் அன்பாக பழகினர், சிலர் இரவில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தவே, விடுதியை நோக்கி விரைந்தேன்.

சற்று தொலைவில் ஒரு திருப்பத்தில் கல்லரை தோட்டம் ஒன்றை கண்டதும் பயம் தொற்றியது, சில நொடியில் புதரில் அசாதாரண சத்தம், பயத்தின் எல்லையில் உறைந்தே போனேன். சுவாசிக்கவே மறந்தேன், சட்டென காட்டுப்பன்றிகள் சாலையை கடக்க ஒரே ஓட்டம் பிடித்து விடுதியை மூச்சிரைக்க அடைந்தேன். என் பயத்தை கண்டு நண்பர்கள் சிரித்து நகைத்தனர்.



சற்று நேரத்தில் வயிறும் மீண்டும் உயிர்பெற அறையிலிருந்து வெளியே வந்தேன். கேரளத்திலிருந்து வந்திருந்த சிலர் ஒரு சில கணங்களில் நண்பர்களாகிவிடவே அவர்களோடு மேற்கத்திய இசை, மது, அசைவ உணவு என களித்திருந்தேன். 

என்னுள் இருந்த இன்னொரு ஜீவன் வெளிப்பட்டதாகவே உணர்ந்தேன். அவனை மகிழ்வித்தேன். அன்று மனம், உணர்வு என அனைத்திற்கும் சிறப்பான உணவளித்த திருப்தியில் ஓய்வெடுக்க எண்ணினேன். நண்பர்கள் அழைக்கவே மீண்டும் மழையில் நடனம் என நேரம் கடந்தது.

மறுநாள் என் பயணம் ஆலப்புழை நோக்கி திட்டமிடப்பட்டிருந்ததால், அவர்களிடமிருந்து விடைபெற்று உறங்க செல்கையில் மணி பன்னிரண்டை தாண்டியிருந்தது.


மறுநாள்....
தொடரும்
(பகுதி 02)



வால்பாறை சென்னையிலிருந்து 590 கிமீ,  கோயம்புத்தூரிலிருந்து 108 கிமீ தொலைவில் உள்ள மலை பகுதி. 

விமானம்: கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் வால்பாறை நகரிலிருந்து 115 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இரயில்: சென்னையிலிருந்து பாலக்காடு செல்லும் விரைவு இரயிலில் பொள்ளாச்சி வரை பயணிக்கலாம். 

சாலை: சென்னையிலிருந்து, கோவை, பொள்ளாச்சி வழியாக வால்பாறைக்கு சாலை மார்க்கமாக அரசுப்பேருந்து (இணைப்பு) வசதி உள்ளது. 

தங்குமிடம்: வால்பாறையில் தங்கும் விடுதிகள் பலவாறு உள்ளது.

சிறந்த பருவம்: பருவ மழைக்கு பின்னர் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை வால்பாறை செல்வது சிறப்பு!



Comments

  1. தயவாய் கருத்துகளை பதிவிடவும்; என்னை மேலும் திறம்பட கட்டுரைகள் படைத்திட உதவும் உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கும் "ஒரு தமிழ் பயணி"

    ReplyDelete
    Replies
    1. Great post. The write up is well balanced with the pics. would be helpful if you share the details of your stay and cost etc in the blog.

      Delete
  2. அருமையான பகிர்வு சகோ... இந்த பதிவில் நீங்கள் எந்த அளவிற்க்கு இந்த பயணத்தை நேசித்து அனுபவித்தீர்கள் என்று நன்றாக உணரமுடிகிறது. பதிவு முழுவதும் தமிழ் வார்த்தைகளால் அலங்கரித்துள்ளீர்கள். இப்பதிவு உங்கள் முதல் பதிவு போல் இல்லாமல், பல பயணக் கதைகளை வழங்கியவரின் மேலும் ஒரு பதிவுப் போல் தெளிவாக படிப்பவர்கள் நேரில் பயணம் மேற்க்கொண்டது போல் உணர்வு ஏற்படுகிறது. உங்கள் வலைப்பதிவின் பெயர் அருமையான ஒன்று.

    ReplyDelete
  3. Wow its nice to hear Santhapriyan.....

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை நல்ல தமிழ் நடையில். இன்னும் பல கட்டுரைகள் படிக்க காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி! இதன் அடுத்த பகுதியை பதிவிட்டுள்ளேன், தயவாய் படித்து கருத்துகளை பதிவிடவும்!

      Delete
  5. Arumai. Innum konjam neeladha ena yeanga vaikkum katturai. Naane kaattu pandrigalai parthu bayandhum, Kerala nanbargaludan kelithu irundhadhu polavum oru unarvu. Nandri.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

டார்ஜிலிங் நகர வீதிகளில்...

தனியே கொல்கத்தாவில் இரண்டாம் நாள்...