முதல் தேடல்...(இறுதிப்பகுதி)


முதல் தேடல்....
(பயணக்கட்டுரை இறுதிப்பகுதி)

பயணம்: 01 வால்பாறை-ஆலப்புழா
பகுதி: 02 
பயண தூரம்: 1100 கிமீ (சாலைப்பயணம் / நீர்வழிப்பயணம்)

           
உடலை வருடும் குளிர்த்தென்றல் வீசும் அதிகாலைப் பொழுதில் வென்னீராடிய பின்னர் கையில் ஒரு கோப்பை  தேநீருடன் விடுதியின் முற்றத்தில் ஊஞ்சலில் மெல்ல ஆடியவாறு, பசும்புல்வெளியில் உறங்கும் வெண்பனி துளிகளை ஆதவன் மெல்ல தீண்டியதை ரசித்திருந்தேன். 

வால்பாறை - சாலக்குடி பயணம்
கடிகாரம் ஆறு மணியை காட்ட, சிற்றுண்டிக்கு பின் விடுதியில் இருந்து புறப்பட தயாரானேன். மகிழுந்தில் வால்பாறை பேருந்து நிலையம் வரை நண்பர் வந்து வழியனுப்பி விட்டு செல்ல, பேருந்துக்காக காத்திருந்தேன், சற்று நேரத்தில் வால்பாறையில் துவங்கி மலுக்கப்பாறை, அதிரப்பள்ளி வழியாக திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடிக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறினேன், சாலை மார்கமாக அந்த அழகிய ஐந்தரை மணிநேர பயணம் சாரல் மழையுடன் துவங்கியது.

அடர்ந்த வனத்தின் பசுமையான பள்ளத்தாக்குகள் ஊடே நீண்ட நெடும் பாம்பை ஒத்த சாரல் மழையில் தோய்ந்த சாலையில் பேருந்து ஊர்ந்து செல்ல, சாளரங்களில் சிறியதும் பெரியதுமாய் பல நீர்வீழ்ச்சிகளை வழி நெடுகிலும் கண்டவாறு பயணித்திருந்தேன்.

சாலையோர சிற்றருவி
அதிரப்பள்ளி பேரருவியை காண கண்கள் கோடி வேண்டும். பேருந்து சாலக்குடியை அடைந்ததும் நண்பர்கள் வழிகாட்டியபடி கேரள அரசுப் பேருந்தில் எர்ணாகுளம் வழியே ஆலப்புழா நோக்கி விரைந்தேன். 
கேரள மாநில அரசுப் பேருந்தின் இருக்கைகள் மிகவும் வசதியாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்திருந்தனர்.

பிற்பகலில் பேருந்து ஆலப்புழா நகருள் நுழைந்தது. நகரெங்கும் புனல் வாய்க்கால்கள், பருவமழையால் ஆலம் அங்குள்ள புழைகளில் பொங்கி ஓடிக்கொண்டிருந்தது. 

ஆலப்புழை  நீர்வழிச் சாலை
ஆலப்புழா - ஆலப்புழை அழகிய வனப்புடைய நகர், 
தமிழில் நீருக்கு பல பெயர்கள் உண்டு, அதில் "ஆலம்" என்பது "நீர்க்கட்டி" அல்லது "பனிக்கட்டியை' குறிக்கும். புழைகளில் ஆலம் நிறைந்த ஊர் ஆலப்புழை. பின்நாளில் ஆலப்புழா என்றாகியது.

நகரெங்கும் சிறிய சிறிய வாய்க்கால்கள், ஓடைகள், அவைகளில் சிறிய சுய உபயோக மரப்படகு முதல், பெரிய ஆடம்பர ஈரடுக்கு சொகுசு குளிர்சாதன வாடகை படகுகள் பல அங்கும் இங்கும் மெல்ல நகர்ந்தபடி இருந்தன.

தேசிய நீர்வழிச்சாலை "03"
நம் ஊர்களில் நகரப்பேருந்து போல, இங்கே கேரள அரசு துறைமுக கழகம் சார்பில் கிராமங்களை நீர்வழிகளில் இனைக்க அரசுப் படகுகள் பல்வேறு வழித்தடத்தில் சென்றவண்ணம் இருந்தன. இந்த நீர்வழிச்சாலை, இந்திய மத்திய அரசால் தேசிய "நீர்வழிச்சாலை 3" என அறியப்படுகிறது.


புழைகளில் படகுகள்
நகரின் பிரதான நீரோடைகளில் நடந்தபடி காட்சிகளை கண்டுகளித்தேன். இடையிடையே வயிற்றை தின்பண்டங்களால் நினைத்தேன்.


மாலையில் படகில் பயணம் மேற்கொண்டேன். படகு நகரை தாண்டி செல்லத் துவங்கியது, கரையை தொட்டது தண்ணீர். கரையின் இருமருங்கிலும் சம்பா நெல் வயல்கள் பச்சை கம்பளம் விரித்தார் போல் என்னை வரவேற்றது‌.

சம்பா நெல் வயல் - ஆழப்புழை
மேலும் சிறிது தூரம் படகு முன்செல்ல அந்தியில் கதிரவன் மறைய ஆங்காங்கே சிறிய வீடுகளின் வாயில்களில் சுந்தரமான கேரள பெண்கள் அவர்கள் அணிந்திருந்த வெண்ணிற புடவைகளில் மஞ்சள் அள்ளி பூசியது, வானில் பாடித்திரியும்  புட்கள், என இரு கண்ணில் அடங்கா அளவில் அத்தனை அழகும் அளவிலாது கொட்டி கிடந்தது.

  "அந்தியில் ஆலப்புழை"
இரண்டு மணிநேர படகு சவாரிக்கு பின், என் கண்களுக்கு விருந்தளித்தது போல கேரள கடல் உணவுகள் நாவிற்கும் விருந்தளித்தது. பின் நள்ளிரவு வரை ஆலப்புழா நகர வீதிகளில் ஆறாம் விரலுடன் வலம்வந்தேன். இரவு ஏதோவொரு மலர்களின் மனம், மதுவோடு கிடந்த என்னை தரையில் மிதக்கச் செய்தது.


பின்னர் மறுநாள் ஆலப்புழை நகர் அருகே மராரிக்குளம் கடற்கரையில் அரபிக் கடலில் ஆடித் திளைத்து பிற்பகலில் கோட்டயம், திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் நகரை நள்ளிரவில் அடைந்தேன். ஆலப்புழை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கடல் உணவு விரும்பிகளின் சொர்க்கபுரி என்பேன் தயக்கம் ஏதும் இன்றி!இவ்வாறாக 1100 கிமீ தொலைவிலான எனது "முதல் தேடல் பயணம்" மூன்று தினங்களில் நிறைவுற்றது.

முற்றும்!


ஆலப்புழா சென்னையிலிருந்து 740 கிமீ,  கோயம்புத்தூரிலிருந்து 240 கிமீ மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 152 கிமீ தொலைவில் உள்ளது.

விமானம்: கொச்சி பன்னாட்டு விமான நிலையம் ஆலப்புழை நகரிலிருந்து 83 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இரயில்: சென்னையிலிருந்து  செல்லும் தினசரி அதிவிரைவு இரயிலில் ஆலப்புழை வரை பயணிக்கலாம். 

சாலை: சென்னை, சேலம், கோவை, எர்ணாகுளம் வழியாகவும், நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக சாலை மார்க்கமாக அரசுப்பேருந்து (இணைப்பு) வசதி உள்ளது. 

தங்குமிடம்: ஆலப்புழையில் தங்கும் விடுதிகள் பலவாறு உள்ளது. மேலும் படகு இல்லங்கள் அவரவர் தேவைக்கேற்ப உள்ளது. (முன்பதிவு செய்து செல்வது சாலச்சிறந்தது)

சிறந்த பருவம்: குளிர்காலத்தில் (முன்பனி) நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆலப்புழை செல்வது சிறப்பு!

Comments

  1. Lovely blog! I have visited these places ages back. Thanks for taking me back to these places through your lively blog :)

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு அருமையான பயணக்கதை அருமையான தமிழில் மற்றும் இயற்கையின் அழகோடு.... மென்மேலும் உங்கள் பயணங்களும், பயணக்கதைகள் தொடர வாழ்த்துகள்😍😍😍

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பரே, உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் பல பயணக் கட்டுரைகள் எழுத தூண்டுகிறது!

      Delete
  3. Wow. Very well narrated. Felt like I was traveling with you. Keep traveling...keep writing..keep inspiring...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

டார்ஜிலிங் நகர வீதிகளில்...

தனியே கொல்கத்தாவில் இரண்டாம் நாள்...