நான்மாடக்கூடல் (மதுரை) முதல் கொல்கத்தா வரை...

தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம்
(பயணக்கட்டுரை)

பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம்
பகுதி: 01 கொல்கத்தாவில் நான்

நான்மாடக் கூடல் நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த என் அனுபவ தொகுப்பு. இந்த கட்டுரையில் எனது பயணத்தின் முதல் இரண்டு நாட்களில் சென்னையில் கொல்கத்தா சென்றபோது நிகழ்ந்ததை திரட்டி வார்த்தைகளை தமிழமுதில் தோய்த்து எழுதியுள்ளேன்.

வடகிழக்கு மாநிலங்களின் மீதும், அதன் வனப்பு, உணவு, மக்கள் என அனைத்தையும் சிறிதளவேனும் அறிந்துகொள்ள மனதில் எப்போதும் சிறிய ஆசை ஒன்று இருந்தது.
ஆகவே ஒரு வார கால வடகிழக்கு பயணத்திற்கு திட்டமிட்டேன். திசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் துவங்கி புத்தாண்டு வரையிலான காலத்தில் பயணிக்க சிறந்த தருணம் என அறிந்து பயணத்திற்கு ஆயுத்தமானேன்.

மதுரை மாநகரில் அந்த ஒர் அழகிய அந்தியில், இரயில் மூலம் முதற்கட்ட பயணத்தை துவக்கினேன். அந்த பயணம் சுவாரசியம்மிகுந்த அனுபவங்களை வாரி வழங்கும் என அப்போது நான் நினைத்திருக்கவில்லை. எனது இரயில் ஆர்வலர் நண்பர் ஒருவர் திருச்சிராப்பள்ளி இரயில் நிலையத்தில் என்னை சந்திக்க காத்திருந்தார். அது எங்கள் முதல் சந்திப்பு, அவரிடம் சில நிமிடங்கள் (இரயில் புறப்படும் வரை) பேசிவிட்டு பிறகு இரயில் பயணத்தை தொடர்ந்தேன்.

மதுரை சந்திப்பு
அதிகாலை இரயில் சென்னை எழும்பூர் வந்தடைந்தது, சில மணித்துளி காத்திருப்புக்கு பின் முதல் மெட்ரோ இரயிலில் என் நண்பன் தங்கியிருந்த (அசோக் பில்லர்) அறைக்கு சென்றேன். 

அங்கே சற்று ஓய்வெடுக்க நினைத்தேன் ஆனால் நேரம் போதாது போகவே உடனடியாக குளித்துவிட்டு, காலை சிற்றுண்டி உண்ட பின்னர் இருவரும் வானூர்தி நிலையம் செல்ல தயாரானோம். ஆம் என் நண்பரும் என்னை வழியனுப்ப வானூர்தி நிலையம் வந்தார். ஏறத்தாழ 2700 கிலோமீட்டர் தொலைவிற்கு தனியாக பயணப்படுவது இதுவே முதல் முறை. தேவையான அனைத்தையும் சரிபார்த்த பிறகு, நண்பனுக்கு நன்றி கூறி பாதுகாப்பு சோதனைகள் செய்ய வானூர்தி நிலையத்திற்குள் நுழைந்தேன்.

உள்நாட்டு வானூர்தி பயணமாக இருப்பினும், தனிமை பயணமாதலால் சற்றே படபடப்பு தொற்றிக்கொண்டது. போர்டிங் பாஸ் (Boarding Pass) பெற்ற பின்னர் பாதுகாப்பு சோதனைகள் செய்தனர். விமானம் புறப்பட அரை மணி நேரம் இருந்ததால் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்து சற்றே என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். 

சென்னை உள்நாட்டு வானூர்தி நிலையம்
விமானம் வந்தடைந்தது, சென்னை அமைதி விமான நிலையம் (Silent Airport) என்பதால் அறிவிப்பு ஏதும் இல்லை, மாறாக விமானப்பணிப்பெண்கள் எங்களை அழைத்து ஒரு பேருந்து வாயிலாக விமானத்தின் அருகே அழைத்து சென்றனர்.



விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகு சன்னல் வழியாக பரந்த அளவிலான விமான நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். அதே சமயத்தில் பயண பாதுகாப்பு குறித்து பணிப்பெண்கள் செய்து காட்டியபடி இருந்தனர். சில மணிகளில் விமானம் பயணிக்க ஓடுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விமானம் மேலெழும்பிய அத்தருணத்தில் சென்னையின் அழகை இரசித்தபடி இருந்தேன்.



நேரம் உருண்டோட விமான அதிகபட்ச உயரத்தை அடைந்திருந்தது, என் அருகில் வயதான தம்பதியர் கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் பங்குபெற செல்வதாகவும், அங்கே அவர்கள் மகன் குடும்பம் வசிப்பதாகவும் கூறினார்கள். ‌அவர்கள் என் பயண திட்டங்களை கேட்டு வாழ்த்தினர். பிறகு பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டோம்.


இரண்டரை மணி நேர சலிப்புமிகுந்த பயணம் முடிவுக்கு வந்தது, ஆம் விமானி தரையிறங்க போவதை அறிவித்தார். தற்போது விமானம் சற்றே சாய்ந்து கீழ்நோக்கி பயணித்தது, மெல்ல கொல்கத்தா மாநகர் என் கண்களில் தோன்றியது.



விமானம் தரையிறங்கிய பின்னர், உடன் பயணித்த அந்த தம்பதிகளிடம் விடைபெற்று கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்து, எனது கௌச்சர்பிங் தொகுப்பாளர் (Couch surfing Host) திரு.மருத்துவர் மத்தோ (Dr.Mahato) அவர்களை தொடர்பு கொண்டேன். 

கொல்கத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம்
வங்கள மொழி தெரியாத காரணத்தால் சற்றே பயமும் தொற்றியது, நண்பரிடம் அவரது இல்லத்திற்கு வரும் முன்னதாகவே சில இடங்களை பார்த்துவிட்டு வருவதாக கூறினேன்.

மேற்கு வங்காள குளிர்சாதன அரசுப்பேருந்து
கொல்கத்தா விமானநிலையத்திலிருந்து எஸ்பளனேட் (Esplanade) அதாவது கொல்கத்தா மாநகர மத்திய பகுதிக்கு கொல்கத்தா மாநகர குளிர்சாதன அரசுப்பேருந்தில் சென்றேன்.

அங்கிருந்து வரலாற்று சிறப்புமிக்க சில இடங்களை காண்பதே என் முதல் நாள் ‌திட்டம். டிசம்பர் மாதம் என்பதால் பகல் வேளையில் கூட கொல்கத்தா சற்று குளிராக இருந்தது.
எஸ்பளனேட் பேருந்து முனையத்தில் இருந்த கடைக்கு சென்று தேநீர் அருந்தினேன், மனமும் உடலும் சற்று கதகதப்படைந்தது. 


சற்று வித்தியாசமாக மண்குவளையில் தேநீர் வழங்கப்பட்டது.‌ பிறகு சிலரின் உதவியோடு (ஆங்கிலத்தில்) ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தே அவ்விடத்தை அடைந்தேன். கண்முன்னே அத்தனை கம்பீரமாக காட்சியளித்தது இராணி விக்டோரியா நினைவகம்.‌

இராணி விக்டோரியா நினைவகம்
ஒரு கணம் அப்படியே உறைந்து போய் நின்றேன், அப்போது அங்கிருந்து காவலர் ஒருவர் அங்கு சென்று நுழைவு சீட்டு பெற்று பின்னர் உள்ளே செல்லும்படி அறிவுறுத்த நீண்ட வரிசையில் நின்று முப்பது நிமிடங்கள் கழித்து உள்ளே சென்றேன்.

நுழைவுச் சீட்டு பெற நீண்ட வரிசை
நுழைவுச் சீட்டு
என்ன கம்பீரமான கட்டுமான, எத்தனை அழகு!
மெதுவாக நடக்க துவங்கினேன். கொல்கத்தாவின் கூட்ட நெரிசல் மிகுந்த நகரமைப்பில், இந்த நினைவகம் அத்தனை அமைதியாக இருந்தது.



நடைபாதை எங்கும் அழகிய கூழாங்கலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடக்கும்பொழுது சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது, மேற்கு நோக்கிய நுழைவாயில் வழியாக சென்றேன், மாலை வேளை என்பதால் ஆதவனின் கதிர்களால் நினைவு மாளிகை முழுவதும் தங்க நிறத்தில் ஜொலித்தது.

ஆங்கிலேய கட்டிடக் கலை

விக்டோரியா நினைவக முகப்பு தோற்றம்

விக்டோரியா நினைவக தோற்றம்

இத்தகைய சூழலில் ஆங்கிலே ஆட்சியாளர்கள் அந்த நினைவகத்தில் இருப்பதாக மனதில் கற்பனை செய்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

இராணி விக்டோரியா
நினைவகத்தை இரண்டாக பிரித்து பொதுமக்களை அனுமதித்தனர் தொல்லியல் துறையினர். கீழ்தளத்தில் ஆங்கிலேயர், சுல்தான் மற்றும் சம காலத்தில் உபயோகத்தில் இருந்த போர் கருவிகள் மற்றும் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது‌. 



நினைவகத்தின் நடுவே இராணி விக்டோரியாவின் பளிங்கு முழு உருவச்சிலை கம்பீரமாக நின்றபடி இருந்தது. அதன் மேல் கூடம் விதானம் அத்தனை நேர்த்தியாக வடிவமைப்பு செய்திருக்கின்றனர். மேல் தளத்திற்கு சென்று அங்கிருந்து இந்த காட்சியை காணலாம். 

அழகிய விதானம்

இராணி விக்டோரியாவின் பளிங்கு முழு உருவச்சிலை
பிறகு அந்த நினைவகத்தின் வெளியே வந்தால் நாற்புறமும் அத்தனை பெரிய அளவில் பூங்கா, இடையே அழகிய ஏரி என வனப்புகளை தன்னகத்தே கொட்டி வைத்திருந்தது.
மேற்கு மாநிலங்களில் சற்று சீக்கிரமே இருட்டிவிடும் என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை, சுமார் ஐந்து முப்பது மணிக்கே இருட்டிவிட்டது கொல்கத்தாவில்.‌

பூங்காவை ஒட்டிய அழகிய ஏரி
முதன் முதலாக கல்கத்தாவில் பார்க் இரயில் நிலையம் அருகே சாலையோர கடையில் பெயர் தெரியாத உணவுகளை ருசித்தேன். சுவை சற்று வித்தியாசமாக இருந்தது காரணம் அங்கே சமையலுக்கு கடுகு எண்ணெய் பிரதானமாக உபயோகம் செய்கின்றனர்.

கொல்கத்தா மெட்ரோ இரயில் சற்று வித்தியாசமாக இருந்தது, இந்தியாவின் பழமையான மெட்ரோ இரயில் அதுவே. பார்க் ஸ்டேசன் முதல் டோலிகஞ்ச் (Tollygunge) வரை மெட்ரோ இரயிலில் பயணித்தேன்.‌  டோலிகஞ்சில் மின்சார புறநகர் இரயில் நிலையத்தை அடைந்த போது மணி எழு, அங்கிருந்த ஒரு வங்காள நபர் நான் செல்ல வேண்டிய மார்க்கமாக அதே இரயிலில் பயணிக்க இருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தேன், அவரோ என்னிடம் நமது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.

டோலிகஞ்ச் இரயில் நிலையத்தில் நான் கண்ட காட்சி என்னை மேலும் ஆச்சர்ய படுத்தியது.‌

டோலிகஞ்ச் இரயில் நிலையத்தில் நான் கண்ட முருகன் சிலை
அந்த இரயில் நிலைய நடைமேடையில் தமிழ் கடவுளான முருகனின் திருவுருவச் சிலையை கண்டேன். நினைவுகள் மெல்ல மிதந்தது, நான் பயணிக்கவேண்டிய பட்ஜ் பட்ஜ் (Budge Budge) மின்சார இரயிலும் வந்தடைந்தது. கூட்டத்தில் ஏறி எப்படியோ நிற்பதற்கு ஏற்ற இடத்தை அடைந்தேன்.
மின்சார புறநகர் இரயில் மெல்ல வேகமெடுக்க, முகத்தில் அந்த குளிர்ந்த காற்று இதமாய் வீசியது, வங்காளத்தில் மக்கள் ஏதேதோ பேச ஏதுமறியா குழந்தை போல நின்றிருந்தேன். நான் இறங்க வேண்டிய சந்தோஷ்பூர் (Santhoshpur) இரயில் நிலையம் வந்தது.

மருத்துவர் மகத்தோவின் இல்லம் இரயில் நிலையம் அருகே தான் என்பதாலும் அவர் இல்லம் கூகுள் இணைப்பு (Google Tagged) இருந்ததால் கூகுள் மேப்ஸ் (Google Maps) உதவியுடன் நடந்தே அவர் இல்லத்தை அடைந்தேன். அவர் என் வருகைக்காக வாசலில் நின்றிருந்தார்.

- தொடரும்...

Comments

  1. இருக்கையில் இருந்தபடி கொல்கத்தா வை சுற்றிபார்த்த அனுபவம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி, மேலும் இதன் தொடர்ச்சியாக சில பகுதிகளை எழுதவுள்ளேன் தங்கள் ஆதரவை வேண்டி🙏🏼

      Delete
  2. சிறப்பு பயணம் அனுபவ வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தங்கள் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி.
    கட்டுரையின் வாயிலாக கல்கத்தா நகரின் வாயிலை அடைந்த அழகிய அனுபவத்தை
    தங்கள் பயணத்தின் ஊடாக பெற்றேன். இனிவரும் கட்டுரைகளின் வழியாகவும் தாங்கள் அடைந்த அழகிய தருணங்களில் நானும் வாழ்ந்திட வாய்ப்பை எதிர்நோக்கும் தங்கள் நண்பன். வாழ்த்துகள் 😊👌💕

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பரே, தொடர்ந்து இந்த பயணத்தில் என்னோடு இணைந்து பயணியுங்கள்

      Delete
  4. I never travelled beyond Karnataka or Andhra... While reading this I felt like that I travelled to Kolkatta through your words... It's really awesome...
    I loved it.. ❤️❤️❤️

    ReplyDelete
  5. Cutie pie... Awesome blog.. Keep writing ❤️

    ReplyDelete
  6. It's too good narration bro..loved reading it !!

    ReplyDelete
    Replies
    1. Thanks bro, Keep supporting me! Also please read other writeups too

      Delete

Post a Comment

Popular posts from this blog

சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

டார்ஜிலிங் நகர வீதிகளில்...

தனியே கொல்கத்தாவில் இரண்டாம் நாள்...